கற்பிட்டி, கண்டக்குழி குடா பகுதியில் நேற்று (16) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் அவரது 7 வயது மகனும் உயிரிழந்துள்ளனர்.
தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின்கம்பம் ஒன்றில் மோதியதில் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த தந்தை 40 வயதுடையவர் எனவும், இருவரும் கந்தக்குழி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது இருவரும் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








