அமெரிக்காவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகளின் அளவை கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளில் தென் கொரியா எதிர்பார்த்த அளவு ஆதரவு வழங்கவில்லை எனக் கூறிய ட்ரம்ப், இதுவே பயிற்சிகளைக் குறைப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த முடிவு வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுடனான தனது உறவை மேலும் வலுப்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் தென் கொரிய இராணுவங்கள் ஆண்டுதோறும் பல்வேறு கூட்டு பயிற்சிகளை நடத்தி வருகின்றன. இவை தமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக வட கொரியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதற்கிடையில், இரு நாடுகளும் இணைந்து நடத்தவுள்ள ‘உல்ச்சி சுதந்திரக் கேடயம்’ என்ற 11 நாள் இராணுவப் பயிற்சியில் சுமார் 18,000 தென் கொரிய வீரர்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கூட்டு இராணுவப் பயிற்சிகள் முழுமையாக நிறுத்தப்படாது என்றும், எதிர்காலத்தில் அவை வரையறுக்கப்பட்ட அளவில் முன்னெடுக்கப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.








