இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா பிராந்திய அருங்காட்சியகத்தில், புகழ்பெற்ற மறுமலர்ச்சிக் கால ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினாவின் நான்கு அரிய கலைப்படைப்புகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 15ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்த கொள்ளையில், 1473ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட San Gregorio Polyptych ஓவியத் தொகுப்பின் மூன்று பகுதிகளும், இருபுறமும் ஓவியம் வரையப்பட்ட மற்றொரு படைப்பும் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் அந்த ஓவியத் தொகுப்பின் ஐந்து மரப் பலகைகளையும் எடுத்துச் சென்ற நிலையில், அவற்றில் இரண்டு பலகைகளை தப்பிச் செல்லும் போது அருங்காட்சியகத்திற்கு அருகில் கைவிட்டுச் சென்றுள்ளனர்.
திருடப்பட்ட கலைப்படைப்புகளின் மதிப்பு சுமார் 70 முதல் 80 மில்லியன் யூரோக்கள் என கலை நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இது இலங்கை ரூபாயில் பல நூறு கோடி ரூபாய்க்கு சமமானதாகும்.
சம்பவம் தொடர்பில் இத்தாலிய அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அரிய கலைப்படைப்புகள் சட்டபூர்வ சந்தையில் விற்பனை செய்வது கடினம் என்பதால், இந்தக் கொள்ளை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.







