செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த பின்னர், இதுவரை இடம்பெற்ற பணிகள் மற்றும் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்கள் தொடர்பான அனைத்து விடயங்களும் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (18) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
செம்மணி புதைகுழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வுப் பணிகள், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் மரண தண்டனை கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் சாட்சியங்களைப் பெறுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 500க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அகழ்வுப் பணிகள் நாளை (19) புதன்கிழமை வரை தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சாட்சியாளர்களிடம் மேற்கொள்ள வேண்டிய விசாரணைகள் நீதிமன்ற நடைமுறைகளுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.








