இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பாதாள உலகக் கும்பல் தலைவனும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’ துபாயில் கைது செய்யப்பட்டு இன்று (25) அதிகாலை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 36 வயதான இவருக்கு எதிராக கொலை, கொலை முயற்சி, கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் மற்றும் கப்பம் கோருதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவிசாவளை நீதவான் நீதிமன்ற வழக்கொன்றின் அடிப்படையில், இவருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கையும் பெறப்பட்டிருந்தது.

மேலும், கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள கொலை வழக்கொன்றில் ஆஜராகத் தவறியமை உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் திறந்த பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள ‘பஸ் லலித்’திடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








