நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அனர்த்தத்தில் நேபாளத்தில் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள், 54 அமெரிக்கர்கள், 33 பிரித்தானியர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட நேபாளியர்களும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, திபெத் பகுதியில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 265 பேரை காணவில்லை என சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேபாளத்தின் ரசுவா பகுதியில் நேற்று (26) திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளும் பாரியளவில் சேதமடைந்துள்ளன.
ஆரம்பத்தில் நிலநடுக்கம் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், பின்னர் மண்சரிவு காரணமாக நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த பேரனர்த்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா, ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.








