கோதுமை மா விலை ரூ.17-ஆல் அதிகரிக்கப்பட்டதற்கான காரணம் உலகில் நிலவும் யுத்த சூழ்நிலையால் போக்குவரத்து மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரித்ததே என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மா விலை அதிகரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தாலும், அரசாங்கம் தலையிட்டு இறக்குமதி நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் காரணமாக மா விலை இதைவிட அதிகமாக உயர்வதைத் தடுக்க முடிந்ததாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“குறிப்பாக, உலகில் நிலவும் யுத்த நிலைமை காரணமாக கடல் போக்குவரத்து செலவுகளும் காப்புறுதிக் கட்டணங்களும் பெருமளவில் அதிகரித்துள்ளன. இதன் தாக்கம் இறக்குமதி செய்யப்படும் மாவின் விலையிலும் பிரதிபலிக்கிறது.
உண்மையில், மா விலை இதைவிட அதிகமாக உயர்ந்திருக்கக்கூடிய நிலை இருந்தது. ஆனால், வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்ட எமது அமைச்சு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, விலை அதிகரிப்பை ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு கட்டுப்படுத்த முடிந்தது,” என அவர் தெரிவித்தார்.
இந்த நிலைமையை எதிர்க்கட்சி அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தி பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டிய பிரதி அமைச்சர், மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் அதிகபட்சமாக தலையிட்டு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வலியுறுத்தினார்.
இதன்படி, சதொச, கோப் சிட்டி மற்றும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட தேசிய கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம் ஆகியவற்றின் ஊடாக அத்தியாவசிய பொருட்களை போட்டித்தன்மை கொண்ட விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.








