மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் நாவற்பழம் ஒன்றை உட்கொண்ட 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த, 37ஆம் கிராமம் நவகிரி வித்தியாலயத்தில் 6ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த ரொ. சஞ்சீவ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினமான நேற்று மாலை, சிறுவனின் வீட்டிற்கு முன்னால் உள்ள நாவல் மரத்திலிருந்து நிலத்தில் விழுந்து கிடந்த நாவற்பழம் ஒன்றை சிறுவன் எடுத்து உண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி விழுந்த நிலையில், குடும்பத்தினர் அவரை உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலத்தில் கிடந்த நாவற்பழத்தில் பாம்பின் விஷம் பட்டிருக்கலாம் என்பதன் காரணமாக சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், உயிரிழப்புக்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்த பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







