நாட்டிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்காக பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு பாடசாலை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாணவர்களின் நடத்தை மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் பெற்றோரும் ஆசிரியர்களும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பிள்ளைகள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனரா என்பதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விரைவுப் பரிசோதனை கருவிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான முன்மொழிவு ஜனாதிபதி தலைமையிலான தேசிய குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பரிசோதனை கருவிகளை முதற்கட்டமாக சந்தைகளில் கிடைக்கச் செய்து, பின்னர் உள்ளூர் சில்லறை விற்பனை நிலையங்கள் ஊடாக நாடு முழுவதும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெற்றோர் மருத்துவ நிலையத்திற்குச் செல்லாமல், தங்களது பிள்ளைகளுக்கு தனிப்பட்ட முறையில் போதைப்பொருள் பரிசோதனையை மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







