திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், கிளிவெட்டி, வெருகல், மூதூர், சேருவில மற்றும் சம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சிறுபோக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், கடந்த போகத்தை விட இம்முறை அறுவடை செய்யப்படும் நெல் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யப்படுவதால் தாம் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கல்லாறு மற்றும் கிளிவெட்டி பகுதிகளில் இரண்டு நெல் களஞ்சியசாலைகள் காணப்படுகின்ற போதிலும், அங்கும் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அறுவடை செய்த நெல்லை தனியார் வர்த்தகர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

வேளாண்மைச் செய்கைக்கான செலவுகள் முன்னைய காலங்களை விட அதிகரித்துள்ள நிலையில், அதிக செலவு செய்து பயிர்ச்செய்கை மேற்கொண்ட போதிலும், கடந்த போகத்தை விட இம்முறை குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, விவசாயிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு, நெல்லுக்கான நியாயமான விலையை உறுதி செய்வதுடன், அரசாங்க நெல் களஞ்சியசாலைகள் ஊடாக உடனடியாக நெல் கொள்வனவை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







