சுமார் ஐந்து கோடி பதின்மூன்று லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ மற்றும் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு வந்த இரண்டு வெளிநாட்டுப் பயணிகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 39 வயதுடைய இரண்டு தாய்லாந்து நாட்டவர்கள் ஆவர். தாய்லாந்தில் உள்ள இறைச்சிக் கடையொன்றில் இறைச்சி வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் என இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று (08) அதிகாலை 12.00 மணியளவில் தாய்லாந்தின் பேங்காக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர். வருகை முனையத்தில், அறிவிப்பதற்கு எதுவும் இல்லை என்பதைக் குறிக்கும் ‘பசுமைப் பாதை’ (Green Channel) வழியாகப் போதைப்பொருளைக் கடத்திச் செல்ல முயன்றபோது, சுங்க அதிகாரிகள் இவர்களைச் சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போது, இவர்களது இரண்டு பயணப் பைகளுக்குள் விட்டமின் அடங்கிய 16 கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 496 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ‘திராட்சைப் பசை’ போன்று தோற்றமளிக்கும் வகையில் பொலித்தீன்களில் சுற்றித் தயாரிக்கப்பட்டிருந்த 641 கிராம் ‘ஹஷீஷ்’ போதைப்பொருளும் அதிகாரிகளால் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, சந்தேக நபர்கள் இருவரும் மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலையப் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.








