இலங்கை கடற்படையினர், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்துடன் இணைந்து முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில் நடத்திய கூட்டுச் சோதனை நடவடிக்கையின்போது, வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன் தொகுதி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று (07) கிழக்குக் கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான கோட்டாபய, முல்லைத்தீவு மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்துடன் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்போது, புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில் மீன்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்குரிய இடம் ஒன்று சோதனையிடப்பட்டது.
இதில், வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட 3,200 கிலோகிராமிற்கும் அதிகமான மீன் தொகுதியுடன் சந்தேக நபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட மீன் தொகுதியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.








