மட்டக்களப்பு, சந்திவெளி பகுதியில் இன்று (9) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிரான்குளத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர், பாசிக்குடாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், நேற்றிரவு பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தனது கிராமத்தை நோக்கிப் பயணித்துள்ளார்.
கிரான்குளத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் இன்று நடைபெறவிருந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவர் அதிகாலை வேளையில் வீடு திரும்பிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, சந்திவெளி பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த அவரது மோட்டார் சைக்கிள், எதிரே வந்த பேருந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இளைஞரின் மரணம் கிரான்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









