சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி புத்தளத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்து, செப்டெம்பர் 8ஆம் திகதி புத்தளம் பள்ளிவாசல்பாடு மற்றும் நாவற்காடு கடற்கரைப் பகுதிகளில் விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது, சந்தேகத்திற்கிடமான 64 உரைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரித் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.












