நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்டக் கடன் மதிப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், அரசாங்க அதிகாரிகளுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு இன்று (10) இலங்கை வந்துள்ளது.
இக்குழு எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுக்கவுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான IMF தூதுக்குழுவின் தலைவர் இவான் பாப்பஜோர்ஜியோ, சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைந்த 7வது மதிப்பாய்வு மற்றும் 2026ஆம் ஆண்டின் உறுப்புரை IV ஆலோசனைகள் ஆகியவற்றில் இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் எனக் குறிப்பிட்டார். இந்த விஜயத்தின் முடிவில் தமது குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கொள்கை வகுப்பாளர்களின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கும், பொருளாதார மீட்சியை வலுப்படுத்துவதற்குமான முயற்சிகள் தொடரும் நிலையில், பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தை இவ்விஜயத்தின்போது தூதுக்குழுவினர் உன்னிப்பாக மதிப்பாய்வு செய்யவுள்ளனர். அத்துடன், நாட்டின் பேரண்ட பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் அக்குழுவினர் ஆராயவுள்ளனர்.
பாப்பஜோர்ஜியோ தலைமையிலான IMF தூதுக்குழு முன்னதாக 2026 ஜூன் 24 முதல் 30ஆம் திகதி வரை கொழும்பில் மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்தே, இந்த செப்டெம்பர் மாத விஜயம் இடம்பெறுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி ஆதரவு சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.








