பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், அவருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு உயர் நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sunday Island செய்தியின்படி, ஞானசார தேரரை மீண்டும் சிறையில் அடைத்து, அவரது எஞ்சிய தண்டனையை அனுபவிக்கச் செய்வதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் நாவல, ராஜகிரிய பகுதியில் உள்ள அவரது விகாரைக்குச் சென்றுள்ளனர்.
எனினும், விகாரையில் இருந்த பிக்குகள், ஞானசார தேரர் தற்போது எங்கு இருக்கிறார் என்பது தங்களுக்குத் தெரியாது என சிறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதில் சுமார் ஒன்பது மாதங்கள் சிறையில் இருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 மே மாதம் அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியிருந்தார்.
இந்த மன்னிப்பு தன்னிச்சையானது என்றும், பொதுமக்களின் நம்பிக்கையையும் இயற்கை நீதிக் கொள்கைகளையும் மீறியதாகவும் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, ஜனாதிபதி மன்னிப்பை செல்லாது என அறிவித்தது.
இதன் காரணமாக, ஞானசார தேரர் தனது ஆறு ஆண்டுச் சிறைத்தண்டனையில் ஏற்கனவே அனுபவித்த காலத்தைத் தவிர, எஞ்சிய தண்டனையை மீண்டும் சிறையில் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது தற்போதைய இருப்பிடம் தொடர்பில் அதிகாரிகளுக்கு தெளிவான தகவல் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.







