போதைப்பொருள் பாவனை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் சோதனை நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் தீவிரப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கமைய, அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
தினசரி இடம்பெறும் வீதி விபத்துகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, போதைப்பொருள் பாவனை, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், ஆபத்தான மற்றும் கவனயீனமான முறையில் வாகனம் செலுத்துதல், அதிக சோர்வு ஆகியவை விபத்துகளுக்கான முக்கிய காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, டிப்பர் வாகனங்கள், லொறிகள், முச்சக்கரவண்டிகள் மற்றும் பயணிகள் பேருந்துகளின் சாரதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்திய பல பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் சாரதி உரிமங்களை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும், பேருந்து சாரதிகள் அதிக வேகத்தில், போட்டித்தன்மையுடன், ஒழுக்கமற்ற முறையில் அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்துவதை பொதுமக்கள் அவதானித்தால், 070 47 55 600 என்ற WhatsApp இலக்கத்திற்கு வாகன இலக்கம் தெளிவாகத் தெரியும் வகையிலான காணொளியை அனுப்பி தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், தராதரம் பாராது சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.







