அவசர மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்கள் பொலிஸாரின் உதவியை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய மொபைல் செயலியொன்றை இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
‘SOS’ வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலியின் மூலம், அவசர நிலை ஏற்படும் போது ‘SOS’ பொத்தானை சிறிது நேரம் அழுத்திப் பிடிப்பதன் ஊடாக, பயனரின் இருப்பிடத் தகவல் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டை, பெற்றோரின் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஒன்றைப் பயன்படுத்தி இந்த செயலியில் பதிவு செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பொலிஸாரின் அவசர சேவையைத் தவறாகப் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் திணைக்களம் எச்சரித்துள்ளது.







