இலங்கையின் அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, இந்த வாரத்தை ‘கறுப்பு வாரமாக’ பிரகடனப்படுத்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களின் பிரதான நுழைவாயில்கள் மற்றும் வளாகங்களில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்படவுள்ளன.
மேலும், புதன்கிழமை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளித்து எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும், எட்டப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் உடன்பாடுகள் நடைமுறைக்கு வரவில்லை என சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதன் காரணமாக பல்கலைக்கழகக் கல்வித்துறை நெருக்கடியை எதிர்கொள்வதுடன், 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்க சம்மேளனம் தீர்மானித்துள்ளதுடன், வெறும் வாக்குறுதிகளுக்கு பதிலாக நடைமுறைத் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.








