முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்ஷ தனியார் வைத்தியசாலையிலிருந்து நேரடியாக விமான நிலையத்துக்குச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
FCID முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு இதற்கு முன்னர் அவருக்கு எந்தவொரு அழைப்பாணையும் வழங்கப்படவில்லை எனவும் குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று (16) அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நிலையில், விமான நிலைய நுழைவாயிலுக்கு அருகில் வைத்து விமான நிலைய அதிகாரி ஒருவர் அழைப்பாணைக் கடிதத்தை ஷிரந்தி ராஜபக்ஷவிடம் கையளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அதற்கு முன்னர் FCID தரப்பிலிருந்து எந்தவொரு அழைப்பாணையும் அவருக்கு வழங்கப்படவில்லை எனவும் குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.







