இலங்கையில் எதிர்வரும் 10 நாட்களில் பல பகுதிகளில் பரவலான மழைப்பொழிவு பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனுடன் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடு அதிக மழைப்பொழிவு நிலவும் காலப்பகுதிக்குள் நுழைந்துள்ள நிலையில், மோசமடையக்கூடிய வானிலை நிலைமைகளை எதிர்கொள்ள அதிகாரிகள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.
இன்று (16) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தற்போது நிலவும் ‘எல் நினோ’ (El Niño) நிலைமையின் தாக்கங்களை எதிர்கொள்ள ஏற்கனவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
எனினும், எதிர்வரும் காலங்களில் கனமழை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை கருத்திற்கொண்டு மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் அதிக மழைப்பொழிவு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதன் காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயமும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வங்காள விரிகுடா பகுதியில் அடிக்கடி வளிமண்டலத் தாழ்வு நிலைகள் மற்றும் குழப்பங்கள் உருவாகக்கூடும் எனவும், ‘எல் நினோ’ தாக்கத்தால் அவற்றின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் விஜேமன்ன விளக்கமளித்தார்.
டிசம்பர் மாதத்தில் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு கிடைக்கக்கூடும் என்பதால், பொதுமக்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தொடர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சராசரி அளவிலான மழைப்பொழிவு எதிர்பார்க்கப்பட்டாலும், இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD) தொடர்பான சில வானிலை நிலைமைகள் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சூழலை உருவாக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, அடுத்த ஆண்டு பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிக வெப்பநிலையுடன் ஒப்பீட்டளவில் குறைந்த மழைப்பொழிவு நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாறிவரும் வானிலை நிலைமைகளுக்கு நாட்டை தயார்படுத்தும் வகையில், எதிர்வரும் மாதங்களில் கிடைக்கக்கூடிய மழைநீரை முறையாக சேமித்து நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது என வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.








