வழக்குத் தீர்ப்பின் பிரதியை வழங்குவதற்காக 500 ரூபாய் இலஞ்சமாகக் கோரி பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த பணத்தகராறு தொடர்பான வழக்கில் இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர், வழக்கின் தீர்ப்பு பிரதியை வழங்குவதற்காக சந்தேகநபர் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி 500 ரூபாய் இலஞ்சப் பணத்தை கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், சந்தேகநபர் நேற்று (16) பிற்பகல் சுமார் 3.35 மணியளவில் கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.








