சர்வதேச மாணவர்கள் கல்வி பயிலும் காலப்பகுதியில் அவர்களின் துணைவர்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதைக் கட்டுப்படுத்துவதுடன், தற்காலிக குடியேற்ற விசாக்களை மாற்றுவதற்கான விதிமுறைகளையும் கடுமையாக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் மூலம் தற்போது சுமார் 300,000 ஆகக் காணப்படும் நிகர வெளிநாட்டு குடியேற்றம், 2028ஆம் ஆண்டளவில் 225,000 ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய விதிமுறைகளின்படி, அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களின் துணைவர்கள் அந்நாட்டில் பணிபுரிய அனுமதிக்கப்படுகின்றனர். எனினும், அவர்கள் பணிபுரியக்கூடிய மணித்தியாலங்களின் எண்ணிக்கை மாணவர் பயிலும் பாடநெறியைப் பொறுத்து மாறுபடுகிறது.
மேலும், சர்வதேச மாணவர்கள் 18 வயதுக்குட்பட்ட தங்களது குழந்தைகளையும் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதற்கு தற்போதைய விதிமுறைகளின் கீழ் அனுமதி உள்ளது.
குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அவுஸ்திரேலியாவின் ‘வன் நேஷன்’ கட்சியும் தற்காலிக குடியேற்றத்தைக் குறைக்கும் திட்டங்களை முன்வைத்துள்ளது.
அக்கட்சியின் தலைவர் பவுலின் ஹான்சன் தலைமையிலான ‘வன் நேஷன்’ கட்சி, மூன்று ஆண்டுகளில் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை 750,000 ஆல் குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
ஆரம்ப மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், ஆண்டுதோறும் நிகர வெளிநாட்டு குடியேற்றத்தை 130,000 ஆகக் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்படும் என்றும் அந்தக் கட்சி கூறியுள்ளது.
கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகள் எல்லைக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த நிலையில், 2022 பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலியா தனது சர்வதேச எல்லைகளை மீண்டும் திறந்தது.
இதனைத் தொடர்ந்து சர்வதேச மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் தற்காலிக திறன் வாய்ந்த தொழிலாளர்களின் வருகை அதிகரித்ததால், நாட்டின் நிகர வெளிநாட்டு குடியேற்றமும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தது.
அதிகரித்த குடியேற்றம் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், சமூக ஒற்றுமையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகர குடியேற்ற எண்ணிக்கையில் குறைவான போக்கு காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2025 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டில் அவுஸ்திரேலியாவின் நிகர வெளிநாட்டு குடியேற்றம் 306,000 ஆகப் பதிவாகியுள்ளது. இதில் பாதிக்கும் அதிகமானோர் சர்வதேச மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் 518,000 ஆக உச்சத்தைத் தொட்ட நிகர குடியேற்றம், 2024ஆம் ஆண்டில் 429,000 ஆகக் குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








