சிறுவர்கள் நாட்டின் பொக்கிஷம் என்பதால் அவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
வாழ்விற்கு பலம் வீட்டு உதவித் திட்டத்தின் மூலம் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வளரும் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் நோக்கில், பாதுகாப்பான இல்லத்திற்காகக் கடந்த வருடம் ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதுடன், இவ்வாண்டு அத்தொகை இரண்டு மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். குறித்த தொகை போதுமானதாக இல்லாவிட்டால், மேலதிக நிதி ஒதுக்கீடுகளைச் செய்யத் தாம் தயாராக இருப்பதாகவும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் நேற்று (17) கலந்துகொண்டபோது அவர் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், சிறுவர் பராமரிப்பு நிலையங்களிலிருந்து சமூகமயப்படுத்தப்படும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கும், பாதுகாப்பற்ற மற்றும் அதிக ஆபத்தான சூழ்நிலையில் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட சிறுவர்களுக்காகவும் வீடுகளை நிர்மாணிப்பதற்கு இரண்டு மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுவதுடன், இன்றைய தினம் மேல் மாகாணப் பயனாளிகளுக்கு அந்த நிதி உதவி வழங்கப்பட்டது.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, சிறுவர்கள் எங்கு, எவ்வாறான சூழ்நிலையில் வாழ்ந்தாலும் அவர்கள் நாட்டின் பிள்ளைகளே எனவும், அரசாங்கத்திற்கும் பிள்ளைகளுக்கும் இடையே பிணைப்பு உள்ளதாகவும், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதும் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டார்.
1956ஆம் ஆண்டு முதல் சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டிருந்தாலும், 1998ஆம் ஆண்டில்தான் அதன் செயற்பாடுகள் முழுமையடைந்ததாகவும், எனினும் இன்னும் பல துறைகள் ஊடாகச் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் இருக்கும் பிள்ளைகள் சமூகத்துடன் இணைக்கப்படும்போது, அவர்களுக்கு நிதிச் சேமிப்பும் ஒரு சொத்தும் வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், ஒவ்வொரு பிள்ளைக்கும் வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்கி மாதந்தோறும் 5,000 ரூபா வைப்புச் செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.








