தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக ஈரோஸ் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி தீர்மானித்துள்ளதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா. பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசாவுடன் இணைந்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
16 ஆண்டுகளாக தமிழ் மக்களின் அரசியல் தீர்வு கிடைக்காத நிலையில், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களை இணைத்து அரசியல் ரீதியாக செயற்பட வேண்டிய காலகட்டம் ஏற்பட்டுள்ளதாக இரா. பிரபாகரன் தெரிவித்தார்.
முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு, வாழ்வாதாரம் மற்றும் இருப்பிடப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் இணைந்து செயற்பட உள்ளதாக அவர் கூறினார்.
இதன்போது கருத்து தெரிவித்த கந்தசாமி இன்பராசா, முன்னாள் போராளிகளின் பொருளாதார நிலை மற்றும் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஈரோஸுடன் இணைந்து செயற்பட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.







