ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்றாகப் பயணம் செய்யும் போது, குழந்தை ஒருவருக்காக பின் இருக்கையின் நடுப்பகுதியில் கூடுதல் சீட் பெல்ட் பொருத்திக்கொள்ள முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்ட அமைச்சர், வாகனத்தில் பயணிக்கும் ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே சீட் பெல்ட் தொடர்பான புதிய விதிமுறைகளின் நோக்கம் எனக் குறிப்பிட்டார்.
“தேவையான ஒவ்வொரு இருக்கைக்கும் சீட் பெல்ட் இருக்க வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. ஒரு வாகனத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும் எனக் கட்டுப்படுத்துவது நோக்கமல்ல. முக்கியமானது ஒவ்வொரு பயணியும் சீட் பெல்ட் அணிந்திருப்பதாகும்” என அமைச்சர் தெரிவித்தார்.
ஏற்கனவே சீட் பெல்ட் பொருத்தப்பட்டுள்ள வாகனங்களில் பயணிகள் கட்டாயமாக அவற்றைப் பயன்படுத்த வேண்டும் எனவும், சீட் பெல்ட் இல்லாத வாகனங்களில் அவற்றைப் பொருத்துவதற்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார். இந்த விதிமுறை செப்டம்பர் 19 முதல் அமுலுக்கு வந்துள்ளது.
அண்மையில் விரைவுச்சாலையில் இடம்பெற்ற 11 வாகனங்கள் தொடர்பான விபத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர், அதில் பள்ளி மாணவர்கள் பயணித்த பேருந்தில் இருந்த அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததாகவும், இதன் காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்ட காயங்கள் குறைந்த அளவில் இருந்ததாகவும் தெரிவித்தார்.
பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதை விட, வாகனங்களில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதே சீட் பெல்ட் தொடர்பான சட்டத்தின் பிரதான நோக்கம் என அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு பெற்றோர்கள் கொண்ட குடும்பம் ஒன்றாகப் பயணிக்கும் சந்தர்ப்பத்தில், பின் இருக்கையின் நடுப்பகுதியில் குழந்தைக்காக கூடுதல் சீட் பெல்ட் பொருத்திக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.







