வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகள், சுகாதாரத் துறையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை ஆகியவற்றுக்குத் தீர்வு கோரி, எதிர்வரும் 10ஆம் திகதி கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது.
இந்தப் போராட்டம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக நடத்தப்படவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
பல வருடங்களாகத் தீர்க்கப்படாத சம்பளம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு உள்ளிட்ட அரச அதிகாரிகளுடன் கலந்துரையாட முயற்சித்த போதிலும், உரிய பதில் கிடைக்கவில்லை என சங்கம் குறிப்பிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து வாகன இறக்குமதி வரிச் சலுகைகள் இரத்து செய்யப்பட்டமை, கொடுப்பனவுகளுக்கு அதிக வரி விதிக்கப்பட்டமை மற்றும் 2025ஆம் ஆண்டு சம்பளத் திருத்தத்தின்போது மேலதிக கடமை மற்றும் விடுமுறை நாள் கொடுப்பனவுகளில் மூன்றில் ஒரு பகுதி நிறுத்தப்பட்டமை உள்ளிட்டவை வைத்தியர்களின் பிரச்சினைகளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
மேலும், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுகாதாரத் துறையின் அங்கீகரிக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கை திருத்தப்படாத நிலையில், தற்போது 25,000க்கும் குறைவான வைத்தியர்களே சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார சேவையின் பணிச்சுமை மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அதற்கேற்ப ஆளணி அதிகரிக்கப்படாததால் வைத்தியர்கள் அதிக வேலைப்பளுவை எதிர்கொள்வதாகவும், தரமான சுகாதார சேவையைப் பேணுவதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.







