ஹட்டன் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கடையொன்றில் தொடர்ந்து நான்கு நாட்களாக இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில், சந்தேகநபரைக் கைது செய்வதற்குப் பொதுமக்களின் உதவியை ஹட்டன் பொலிஸார் கோரியுள்ளனர்.
கடந்த மாதம் 4ஆம் திகதி முதல் குறித்த கடையில் இரவு நேரங்களில் தொடர்ச்சியாகத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, கடை உரிமையாளரால் பொருத்தப்பட்ட சிசிரிவி கமராவில், 23ஆம் திகதி சந்தேகநபர் கடைக்குள் நுழைந்து பணத்தைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
தொடர்ந்து நான்கு நாட்களும் ஒரே விதமான முறையில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்தக் காலப்பகுதியில் கடையிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் திருடப்பட்டுள்ளதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், இச்சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை. சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த காட்சிகளில் காணப்படும் நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், உடனடியாக ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.







