இலங்கையில் நெருங்கிய துணையினால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண்களில் கணிசமானோர் எவ்விதமான முறையான உதவியையும் நாடுவதில்லை என 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேசிய மகளிர் நலன்புரி ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாதிக்கப்பட்ட பெண்களில் 49.3 சதவீதமானோர் உதவியை நாடாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வின்படி, துணையைக் கொண்டிருந்த பெண்களில் 39.8 சதவீதமானோர் தமது வாழ்நாளில் உடல், பாலியல், உளவியல் அல்லது பொருளாதார ரீதியான வன்முறைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். மேலும், 20.4 சதவீதமானோர் தமது நெருங்கிய துணையினால் உடல் மற்றும்/அல்லது பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளனர்.
சமூகத்தின் எதிர்மறையான பார்வை, பழிவாங்கப்படுவோம் என்ற அச்சம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கக்கூடிய உதவிச் சேவைகள் குறித்த போதிய விழிப்புணர்வின்மை ஆகியவை முறைப்பாடுகளை மேற்கொள்ளாமைக்கான முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில், பால்நிலை அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான அணுகலை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கம் புதிய தேசிய வேலைத்திட்டமொன்றை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA Sri Lanka) மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றம் (FAGBV) ஆகியவற்றின் கூட்டிணைப்பில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதுதொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.டி.டி. விக்ரமசிங்க மற்றும் UNFPA இலங்கையின் உதவிப் பிரதிநிதி வைத்தியர் தயாநாத் ரணதுங்க ஆகியோர் கலந்துகொண்டு வேலைத்திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.
நவம்பர் 25ஆம் திகதி சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் முதல் டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் வரையான காலப்பகுதியில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
“#நீதிஎனதுஉரிமை (#JusticeIsMyRight) – ஒன்றிணைந்து பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை நிறுத்துவோம்” என்ற தொனிப்பொருளில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் சமூகப் பங்கேற்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, 2026 நவம்பர் 25ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இருந்து கொழும்பு மாநகர சபை வரை தேசிய நடைபேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் தடைகள் தொடர்பான கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ‘பால்நிலை அடிப்படையிலான வன்முறை சேவை வழங்குநர்களுக்கான தேசிய டிஜிட்டல் விபரத்திரட்டு’ (National Digital Directory of GBV Service Providers) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பொது இடங்களில் இடம்பெறும் பாலியல் தொல்லைகள் மற்றும் குடும்ப வன்முறைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு எதிராக உரிய முறையில் தலையிடுவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் சமூகத் தொடர்பாடல் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதேவேளை, சட்ட மற்றும் கொள்கை ரீதியான சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகள் தொகுக்கப்பட்டு, டிசம்பர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதற்கான 24 மணிநேரமும் இயங்கும் 1938 கட்டணமில்லா மகளிர் உதவிச் சேவை குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனுடன், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் கௌரவம், தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்கும் வகையில் பொறுப்புணர்வுடனும் நெறிமுறைகளுக்கு அமைவாகவும் செய்திகளை வெளியிடுமாறு ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் ஊக்குவிக்கப்படவுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.







