மட்டக்களப்பில் காதலனின் பணத் தேவைக்காகத் தனது தாயின் 8½ பவுண் தாலிக்கொடியைத் திருடி, அதனைத் தனியார் வங்கியொன்றில் 14 இலட்சம் ரூபாவுக்கு அடகு வைத்து பணத்தைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் 22 வயதுடைய யுவதியொருவர் நான்கு மாதங்களின் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வீட்டிற்கு அடிக்கடி வருகை தரும் உறவினரான பெண்ணொருவர் தாலிக்கொடியைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டி, அவரைக் கைது செய்யும் வகையில் நாடகமாடியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து தாலிக்கொடி காணாமல் போனதாக வீட்டினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸாரிடம், தமது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் உறவினரான பெண்ணொருவர் மீது சந்தேகம் இருப்பதாக வீட்டினர் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் குறித்த பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்திய பொலிஸார், அவரிடமிருந்து திருடப்பட்ட தாலிக்கொடியை மீட்க முடியாத நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனையடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவுக்குப் புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா தலைமையில் பொலிஸ் சார்ஜன்களான இகலகம, விக்கினதாஸ் மற்றும் டிகாசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, தாலிக்கொடி காணாமல் போன இரண்டு நாட்களின் பின்னர், அதாவது ஜூன் 30ஆம் திகதி, வீட்டின் உரிமையாளரின் மகளான 22 வயதுடைய யுவதி தனது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி தனியார் வங்கியொன்றில் குறித்த தாலிக்கொடியை 14 இலட்சம் ரூபாவுக்கு அடகு வைத்து பணத்தைப் பெற்றுக்கொண்டமை வங்கிப் பதிவுகள் ஊடாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தனியார் வங்கியொன்றில் பணியாற்றும் குறித்த யுவதியைக் பொலிஸார் இன்று திங்கட்கிழமை (23) கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளின்போது, காதலனின் பணத் தேவைக்காகத் தனது தாயின் தாலிக்கொடியைத் திருடி அடகு வைத்ததுடன், கிடைத்த 14 இலட்சம் ரூபா பணத்தைக் காந்தி பூங்காவில் வைத்து காதலனிடம் ஒப்படைத்ததாக யுவதி தெரிவித்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் காதலன் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட யுவதியை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







