டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பார்வைக் குறைபாடு காரணமாக மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்று ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, நவம்பர் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 135 பாடசாலைகளின் 1,193 மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.
இதன் முதற்கட்டமாக, நவம்பர் 28ஆம் திகதி கண்டி மாவட்டத்தில் கண்டி, தெல்தெனிய, வத்துகாமம் மற்றும் கட்டுகஸ்தோட்டை கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வத்துகாமம் சமுத்திரதேவி மகளிர் வித்தியாலயத்தில் மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.
அதே தினத்தில் கம்பளை மற்றும் தெவிநுவர கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான விநியோக நிகழ்வு ஜினராஜ மாதிரி ஆரம்பப் பாடசாலையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ, நாவுல, கலேவெல மற்றும் மாத்தளை கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான மூக்குக் கண்ணாடிகள் நவம்பர் 28ஆம் திகதி மாத்தளை விஜய தேசிய பாடசாலையில் வழங்கப்படவுள்ளன.
தொடர்ந்து, நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, வலப்பனை மற்றும் ஹங்குராங்கெத்த கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.
அன்றைய தினமே ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான மூக்குக் கண்ணாடிகள் ஹட்டன் ஹைலண்ட்ஸ் பாடசாலையில் வழங்கப்படவுள்ளன.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, ஜனாதிபதி நிதியத்தின் புதிய சமூக நலத்திட்டமாக இந்த வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படும் பாடசாலை மாணவர்கள் மாத்திரமன்றி, பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வேலைத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு பிரித்தானியாவின் Stroud Rotary Club மற்றும் Wish அறக்கட்டளை ஆகியன பங்களிப்பு வழங்குவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பார்வைக் குறைபாடுகள் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதுடன், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வித் தொடர்ச்சிக்கும் ஆதரவளிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.







