குவைத்தின் இரு வெவ்வேறு பகுதிகளில் இலங்கைப் பெண்கள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அலி சபா அல்-சேலம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்து குறித்த பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இரு சம்பவங்களும் இயற்கைக்கு மாறான மரணங்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முதல் சம்பவத்தில், அலி சபா அல்-சேலம் பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையில் அமைந்திருந்த களஞ்சிய அறையிலிருந்து 1988ஆம் ஆண்டு பிறந்த இலங்கைப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர் வழங்கிய தகவலையடுத்து, அஹ்மதி பொது குற்றவியல் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டாவது சம்பவத்தில், அல்-நஹ்தா பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 1999ஆம் ஆண்டு பிறந்த மற்றொரு இலங்கைப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற ஜஹ்ரா பொது குற்றவியல் பிரிவினர் தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குவைத் ஊடகங்களின் தகவலின்படி, இரு பெண்களின் மரணங்களுக்கான காரணங்களைக் கண்டறியும் நோக்கில் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இரு மரணங்களுக்கும் இடையில் தொடர்புகள் உள்ளனவா அல்லது சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரேனும் அடையாளம் காணப்பட்டுள்ளனரா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இலங்கைப் பெண்களின் உயிரிழப்புக்கான காரணங்களைக் கண்டறிய குவைத் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








