செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் சுயாதீனமான தடயவியல் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினர் கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளிடம் ஆவணங்களைக் கையளித்துள்ளனர்.
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் நேற்று (23) இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினர், கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் இந்தோ–பசிபிக் பிராந்தியத்துக்கான உதவிப் பிரதி அமைச்சர் வெல்டன் எப்., இலங்கைத் தொடர்புகளுக்கான பிரதிப் பணிப்பாளர் டெய்ட்ரே யூகிச் மற்றும் சிரேஷ்ட அதிகாரி அரியேல் சொபானி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது, இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணி ஆக்கிரமிப்பு மற்றும் நீதி வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கனேடிய அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின்போது இதுவரை 583 மனித எச்சத் தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்.பி., இவ்விவகாரத்தில் உண்மைகளைக் கண்டறிவதற்காக சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் சுயாதீனமான தடயவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும், முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள 171 ஏக்கர் பூர்வீகக் காணிகளையும், யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் உள்ள 2,117 ஏக்கர் காணிகளையும் அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன், தையிட்டி காணிப் பிரச்சினை, தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகள் மறுக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுச் சிலை அகற்றப்பட்டமை தொடர்பிலும் கனேடிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேறுவதிலும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலைப் பெற்றுக்கொள்வதிலும் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்வதாகக் குழுவினர் சுட்டிக்காட்டினர்.
இலங்கை தொடர்பான மனித உரிமை விவகாரங்களில் சர்வதேச மனித உரிமைப் பொறிமுறைகள் ஊடாக கனடா தனது இராஜதந்திரப் பங்களிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதன்போது, செம்மணி மனிதப் புதைகுழி, கேப்பாப்பிலவு மற்றும் வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான விரிவான ஆவணங்கள் கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.







