பிரான்ஸில் விலைவாசி உயர்வு, பொருளாதார சமத்துவமின்மை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (ஒக்டோபர் 24) நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 4 இலட்சம் பேர் பங்கேற்றதாகவும், தலைநகர் பாரிஸில் மட்டும் 1 இலட்சத்து 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் பொது சேவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல், கல்வித்துறைக்கு கூடுதல் நிதி வழங்குதல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் வீட்டு வாடகை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

போராட்டங்களைக் கட்டுப்படுத்த சுமார் 70,000 பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இதன்போது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டதுடன், பொது சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததாகக் கூறப்படும் சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக மாணவர் அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ள நிலையில், இந்த நிலைமை பிரான்ஸ் அரசாங்கத்துக்குப் புதிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.







