வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ (ARNAB) சூறாவளி காரணமாகக் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (26) சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அடுத்த 12 மணித்தியாலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவின் மத்திய கிழக்கு மற்றும் அதனை அண்மித்த தென்கிழக்குப் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து ‘அர்னாப்’ சூறாவளியாக உருவெடுத்துள்ளது.
இந்தச் சூறாவளி மேற்கு-வடமேற்குத் திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இன்று இரவு 11.30 மணியளவில் மத்திய மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் மேலும் வலுவடைந்து தீவிர சூறாவளியாக மாறுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கத்தினால் குறிப்பிட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். அத்துடன், கடல் அலைகள் 3 முதல் 4 மீற்றர் உயரம் வரை எழக்கூடும் என்பதால் கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூறாவளி இலங்கையை நேரடியாகப் பாதிக்காது என எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் காற்றுச் சுழற்சியின் தாக்கத்தால் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, வட அகலாங்கு 10 முதல் 20 வரையிலும் கிழக்கு நெட்டாங்கு 80 முதல் 95 வரையிலும் அமைந்துள்ள கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான பகுதிகளை நோக்கிச் செல்லுமாறும், வானிலை தொடர்பான புதிய அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.








