கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் இதுவரை அரசாங்கத்திடம் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (27) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மகாநாயக்க தேரர்கள் அவ்வாறான கோரிக்கையொன்றை முன்வைத்தாலும், அரசாங்கம் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு அமைவாகவே செயற்படும் என்றும், நீதிமன்றத் தீர்ப்பை மீறும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், பௌத்த பீடங்களின் நான்கு மகாநாயக்க தேரர்களும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, சிறைச்சாலைத் திணைக்களத்தின் நிலையான உத்தரவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதம் கிடைத்த பின்னர், மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகள், அனுநாயக்க தேரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் சிறைச்சாலை விதிமுறைகளைத் திருத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தப்பட்ட நிலையான உத்தரவுகளுக்கு அமைவாக அதிகாரிகள் தொடர்ந்து செயற்படுவார்கள் என்றும், மகாநாயக்க தேரர்கள் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு” எனத் தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நீதித்துறைக்கு மேலாக அரசாங்கம் செயற்பட்டு நீதிமன்றத் தீர்ப்பொன்றை மாற்றும் நோக்கம் கிடையாது என்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.







