நாட்டில் தேசிய அடையாள அட்டைகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிட்டு விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நீண்டகாலமாகப் பயன்பாட்டில் இருந்த தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக, 2017ஆம் ஆண்டு முதல் 12 இலக்கங்களைக் கொண்ட இலக்க அடையாளத்துடன் கூடிய பிளாஸ்டிக் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.
உற்பத்திச் செலவைக் குறைப்பது உள்ளிட்ட நோக்கங்களுடன் இந்தப் புதிய அடையாள அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், தற்போது பிளாஸ்டிக் அட்டைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் தேசிய அடையாள அட்டைகளை அச்சிடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 10 இலட்சம் அடையாள அட்டைகளை இதுவரை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அச்சிடுவதற்குத் தேவையான அட்டைகள் மற்றும் இயந்திரங்களுக்கான தட்டுப்பாடு காரணமாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலும் ஆறு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பிப்போருக்கு நிரந்தர அனுமதிப்பத்திரங்களுக்குப் பதிலாக தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நவம்பர் மாத நடுப்பகுதியில் சில புதிய அச்சு இயந்திரங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர், சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதமளவில் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவர முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.







