யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டுமானங்களை உடனடியாக அகற்றுமாறு, யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG), யாழ் மாநகர சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த திலீபனை நினைவுகூரும் வகையில், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள கோவிலுக்குச் சொந்தமான காணியில் குறித்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் காணி நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் யாழ் மாநகர சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், மாநகர சபையின் உரிய அனுமதியைப் பெறாமல் நினைவிடத்தின் கட்டுமானங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குறித்த நினைவிடம் பொதுமக்களிடையே கடந்தகாலப் போர் நினைவுகளைத் தூண்டக்கூடும் என்பதுடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் பாதிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இக்காரணங்களை முன்வைத்து, திலீபன் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த கட்டுமானங்களை உடனடியாக இடித்து அகற்றுமாறு யாழ் மாநகர சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








