கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், இரணைமடுக் குளம் மற்றும் பல்லவராயன்கட்டுக் குளம் ஆகியவற்றிலிருந்து கழுவி எடுக்கப்பட்ட மணலை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
குறித்த குளங்களிலிருந்து பெறப்படும் மணலை வீட்டுத்திட்டப் பயனாளிகள் உள்ளிட்ட மணல் தேவையுடையோருக்கு குறைந்த விலையில் வழங்குவதற்கு கரைச்சி மற்றும் பூநகரி பிரதேச சபைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும், மணல் விநியோகத்தைத் தடை செய்யக் கோரி தனிநபர் ஒருவரால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 7ஆம் திகதி முதல் மணல் விநியோகத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று (03) மேல் நீதிமன்ற நீதிபதி ஜி. கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, எதிர்மனுதாரர்களான பிராந்திய நீர்ப்பாசனப் பொறியியலாளர், மாவட்டச் செயலாளர் மற்றும் கரைச்சி, பூநகரி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், செயலாளர்கள் ஆகியோர் முன்னிலையாகினர்.
எதிர்மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி சயந்தன் தலைமையிலான குழுவினரும், அரச அதிகாரிகள் சார்பில் அரச சட்டத்தரணியும் முன்னிலையாகி தமது வாதங்களை முன்வைத்தனர்.
இதனையடுத்து, வழக்கின் இறுதிக் கட்டளை எதிர்வரும் 5ஆம் திகதி வழங்கப்படவுள்ள நிலையில், அதுவரை அமுலில் இருந்த இடைக்காலத் தடை உத்தரவை நீதிமன்றம் நீக்கியுள்ளது.
Do you like this personality?







