மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் கல்வியறிவில் பின்தங்கியவர்கள் அதிகமாகப் பயனடையும் இந்நிலையத்தில், எந்தவிதமான இன, மத, அரசியல் வேறுபாடுகளும் இன்றி மனிதநேயத்துடன் பாதுகாப்பான சிகிச்சை அளிக்கப்படும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையேற்றுள்ள டாக்டர் கு.சுகுணன் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிரந்தர பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் குணசிங்கம் சுகுணன் இன்று தனது கடமைகளைப்பொறுப்பேற்றுக்கொண்டார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றிவந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பதவி உயர்வுடனான இடமாற்றம் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடியினை சொந்த இடமாக கொண்ட குணசிங்கம் சுகுணன் களுவாஞ்சிகுடி,கல்முனை ஆதார வைத்தியசாலை, வவுனியாக பொது வைத்தியசாலை ஆகியவற்றின் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் கடமையாற்றிவந்த நிலையில் நிரந்தர பணிப்பாளராக டாக்டர் குணசிங்கம் சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று தமது கடமையினை பொறுப்பேற்க வந்த பணிப்பாளருக்கு வைத்தியசாலையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்ட பணிப்பாளர், வைத்தியசாலை வளாகத்தில் உள்ள ஆலயத்தில் வழிபாடுகளை முன்னெடுத்தார்.
வழிபாடுகளை தொடர்ந்து வைத்தியசாலையில் பணிப்பாளருக்கான வரவேற்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியலிங்கம், மகப்பேற்று வைத்திய நிபுணரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் மார்க்கண்டு திருக்குமார் உட்பட வைத்திய நிபுணர்கள்,வைத்தியர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள், மருந்தக உத்தியோகத்தர்கள்,வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்கள்,கணக்காளர்கள், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் டாக்டர் சிறிசங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாநகரசபையின் முதல்வரினால் பணிப்பாளர் கௌரவிக்கப்பட்டதுடன் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் கருத்துரைகளும் வழங்கப்பட்டன.
தமது கடமைக்காலத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மக்களுக்கு வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் டாக்டர் சுகுணன் தெரிவித்தார்.







