அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் அப்துல் எல்-ஸெய்யித் (Abdul El-Sayed) வெற்றிபெற்று வரலாறு படைத்துள்ளார்.
குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மைக் ரோஜர்ஸைத் தோற்கடித்த 42 வயதான அப்துல் எல்-ஸெய்யித், அமெரிக்க செனட் சபைக்குத் தெரிவாகும் முதல் முஸ்லிம் உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
எகிப்திய குடியேறிகளின் மகனான இவர், மருத்துவரும் பொது சுகாதாரத் துறை நிபுணருமாவார். முன்னதாக மிச்சிகன் மாநிலத்தின் வெய்ன் கவுண்டி சுகாதாரத் துறை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

தனது தேர்தல் பிரசாரத்தில் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், அனைவருக்கும் மருத்துவக் காப்புறுதி வழங்குதல் மற்றும் அரசியலில் பெருநிறுவனங்களின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை முக்கிய வாக்குறுதிகளாக முன்வைத்திருந்தார்.
குறிப்பாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட குடியரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் இவருக்கு எதிராகப் பிரசாரங்களை முன்னெடுத்திருந்தனர். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எனினும், அவற்றை அப்துல் எல்-ஸெய்யிட் மறுத்திருந்ததுடன், அதற்கான ஆதாரங்களும் முன்வைக்கப்படவில்லை என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
மிச்சிகன் மாநிலத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் கேரி பீட்டர்ஸ் மீண்டும் போட்டியிடாததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காகவே இந்தத் தேர்தல் நடைபெற்றது.
அப்துல் எல்-ஸெய்யிட்டின் வெற்றி அமெரிக்க அரசியலில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்க செனட் சபையில் முதன்முறையாக ஒரு முஸ்லிம் உறுப்பினர் தெரிவாகியுள்ளார்.








