அமெரிக்காவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான இடைத்தேர்தலில், நியூயோர்க் மாநிலத்தின் 12ஆவது செனட் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட அபிர் கவாஸ் (Aber Kawas) வெற்றிபெற்று வரலாறு படைத்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அவர், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஹான்-கோன் டோவை (Han-Khon To) தோற்கடித்து நியூயோர்க் மாநில செனட் உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்.
இதன் மூலம், நியூயோர்க் மாநில சட்டமன்றத்துக்குத் தெரிவான முதல் பாலஸ்தீனிய அமெரிக்கர் என்ற பெருமையையும், அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஹிஜாப் அணியும் பெண் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் பெற்றுள்ளார்.
தேர்தல் ஆரம்ப முடிவுகளின்போது சுமார் 75 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த அபிர் கவாஸ், பின்னர் வெளியான நியூயோர்க் தேர்தல் சபையின் பதிவுகளின்படி 47,291 வாக்குகளையும், 70.13 சதவீத வாக்குப் பங்கையும் பெற்றுள்ளார்.
ஜனநாயக சோசலிச அமைப்பின் (Democratic Socialists of America – DSA) ஆதரவைப் பெற்றிருந்த அவர், குடியேறிகளின் உரிமைகள், அனைவருக்கும் சுகாதாரச் சேவைகள், மலிவு விலையிலான வீடுகள் மற்றும் பாலஸ்தீன மக்களின் உரிமைகள் உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அத்துடன், நியூயோர்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி மற்றும் அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அவரது வெற்றி, அமெரிக்க அரசியலில் பாலஸ்தீனிய மற்றும் முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தில் முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.








