நாட்டின் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் (Amber) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, நாளை (06) அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், இரத்தினபுரி, அனுராதபுரம், பதுளை, மன்னார், மாத்தளை, மொனராகலை, நுவரெலியா மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான மின்னல் தாக்கத்தினால் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், மின்னல் தாக்கத்தினால் மின்சார மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் சேதமடைவதுடன், மின்சாரம், தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்துச் சேவைகளிலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை நெருங்கும் சந்தர்ப்பங்களில் வெளிப்புற விளையாட்டுகள், கட்டுமானப் பணிகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், பாதுகாப்பான கட்டடங்கள் அல்லது மூடப்பட்ட வாகனங்களில் தஞ்சமடையுமாறும், தனிமையான மரங்கள், திறந்த கூடாரங்கள், கடற்கரைகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்சார உபகரணங்கள் மற்றும் கம்பி இணைப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.








