இலங்கையில் நுரையீரல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
2010 முதல் 2020 வரையான காலப்பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலாரிடையேயும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய சுவாச நோயியல் நிறுவனத்தின் மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமன் இத்தாகொட தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, புகைபிடிக்காதவர்களிடையேயும், பெண்களிடையேயும் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ, நுரையீரல் புற்றுநோய்களில் சுமார் 90 சதவீதமானவை புகைபிடித்தலுடன் தொடர்புடையவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இரண்டாம் நிலை புகை, வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் புகை, வீடுகளில் விறகு மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் காற்று மாசுபாடு ஆகியவையும் நுரையீரல் புற்றுநோய்க்கான முக்கிய ஆபத்துக் காரணிகளாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரேடான் வாயு, அஸ்பெஸ்டாஸ் மற்றும் சிலிக்கா போன்ற பொருட்களுக்கு நீண்டகாலம் வெளிப்படுவதும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.








