தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்படுத்தும் முகமாக மேலதிகமாக இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போதுள்ள வான்கதவுகள் ஒவ்வொன்றும் தலா ஒரு அடி வீதம் மேலும் உயர்த்தப்பட்டு திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நீர்த்தேக்கத்தின் திறக்கப்பட்ட மொத்த வான்கதவுகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இந்த நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 5,500 கன அடி நீர் தெதுரு ஓயா நீரூடாக வெளியேற்றப்பட்டு வருகின்றது.
தொடரும் மழைவீழ்ச்சி மற்றும் நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கும் நீரின் அளவைக் கருத்திற்கொண்டு, திறக்கப்படும் வான்கதவுகளின் எண்ணிக்கையோ அல்லது வெளியேற்றப்படும் நீரின் அளவோ மேலும் அதிகரிக்கப்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே, தெதுரு ஓயாவின் கீழ்நிலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் அப் பிரதேசத்தினூடாகச் செல்வோரை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.







