அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத தொழில்சார் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி, எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் சுகயீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மத்திய மற்றும் மாகாண அரச சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சுமார் 30 ஆண்டுகளாகத் தொடரும் தமது தொழில்சார் பிரச்சினைகளுக்கு அடிப்படையான தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு, அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைப் பிரமாணக் குறிப்பை முறையாக நடைமுறைப்படுத்துவது அவசியம் என தொழிற்சங்கக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக நியாயமான பதவி உயர்வுகள், சம்பள அதிகரிப்புகள் உள்ளிட்ட தொழில்சார் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தின் பல்வேறு பொறுப்புவாய்ந்த தரப்பினரிடம் பல தடவைகள் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பல்வேறு கவனயீர்ப்புப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இதுவரை தமது கோரிக்கைகளுக்குத் திருப்திகரமான தீர்வு கிடைக்கவில்லை என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, கடந்த 2026 ஒக்டோபர் 11ஆம் திகதி மத்திய மற்றும் மாகாண அரச சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்திற்கு அமைய, எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி நாடு முழுவதும் ஒருநாள் சுகயீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமது நீண்டகால தொழில்சார் உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என தொழிற்சங்கக் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.








