ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தின்படி, அவரது ஒரே வருமான ஆதாரமாக ஜனாதிபதிச் சம்பளம் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து கொடுப்பனவுகளையும் உள்ளடக்கிய அவரது வருடாந்த வருமானம் 3,081,624 ரூபாவாகும்.
மேலும், ஜனாதிபதியின் மனைவி மற்றும் மகன் குறித்த ஆண்டில் எவ்வித வருமானத்தையும் ஈட்டவில்லை எனப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகனின் கையிருப்பில் 5,000 ரூபாவும் வங்கிக் கணக்கில் 2,500 ரூபாவும் காணப்படுவதுடன், மனைவியின் வங்கிக் கணக்கில் 321,888 ரூபாவும் கையிருப்பில் 35,000 ரூபாவும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நிதிச் சொத்துக்கள் 2025ஆம் ஆண்டில் 29.6 மில்லியன் ரூபாவிலிருந்து 23.5 மில்லியன் ரூபாவாகக் குறைந்துள்ளன. மேலும், அவர் 18 தனிப்பட்ட கடன்களைப் பெற்றுள்ளதாகவும், அவற்றின் மொத்தத் தொகை 909 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் எனவும் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விபரங்கள் 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன.







