இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களில் மேலும் சுமார் 40 இலட்சம் பேர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான TIN இலக்கத்தைப் பெற்று பதிவு செய்ய வேண்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கையில் இதுவரை சுமார் 130 இலட்சம் பேர் TIN இலக்கத்தைப் பெறுவதற்காகப் பதிவு செய்துள்ளதாகவும், நாட்டில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 170 இலட்சமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்னும் சுமார் 40 இலட்சம் பேர் TIN இலக்கத்தைப் பெற்று பதிவு செய்ய வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் சில அத்தியாவசியத் தேவைகளுக்காக மாத்திரமே TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய சட்ட ஏற்பாடுகளின்படி 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் TIN இலக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, TIN இலக்கத்தைப் பெற்றுப் பதிவு செய்வதால் அனைவரும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.







