முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் சர்ச்சைக்குரிய பல ஏற்பாடுகளை நீக்குவதற்கும் திருத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த சட்டமூலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் உறுப்பினர்களை அடையாளம் காண்பதற்கான காரணிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்த பச்சை குத்துதல் (Tattoos) மற்றும் ஏனைய உடல் அடையாளங்கள் தொடர்பான ஏற்பாடுகள் முழுமையாக நீக்கப்படவுள்ளன.
அத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான கடுமையான வழக்கு விசாரணைகளின் தகவல்களை ஊடகங்களில் வெளியிடுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் முன்அனுமதியைப் பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சட்டப்பிரிவும் நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 26 மனுக்கள் இன்று (09) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி விராஜ் தயாரத்ன இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
மேலும், மதுவரிச் சட்டத்தின் கீழான குற்றங்களை இந்தச் சட்டமூலத்திலிருந்து நீக்குவதற்கும், அறிவுசார் சொத்துச் சட்டத்தின் கீழான பதிப்புரிமை தொடர்பான ஏற்பாடுகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தடுத்துவைப்பு உத்தரவுகள் மற்றும் பிணைச் சட்டம் தொடர்பான ஏற்பாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து கொள்கை வகுப்பாளர்களுடன் மேலதிக ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை நாடாளுமன்றத்தின் குழுநிலை விவாதத்தின்போது சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் தனிநபர் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் மற்றும் நீதித்துறையின் அதிகாரங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடையே விவாதங்களையும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








