மாயக் காளான்களில் (Magic Mushrooms) காணப்படும் சைலோசைபின் (Psilocybin) என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் போதைப்பொருள், மூளையின் நரம்புச் செல்களுக்கு இடையிலான தொடர்புகளை மறுசீரமைக்கும் திறன் கொண்டுள்ளதாக அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக (University of California, Santa Cruz) ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஒக்டோபர் 15ஆம் திகதி Nature Neuroscience ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், சைலோசைபின் மூளையில் புதிய நரம்புத் தொடர்புகளை (Neural Connections) விரைவாக உருவாக்குவதுடன், அவை முதிர்ச்சியடைந்து நிலையான தொடர்புகளாக மாறவும் உதவுவது கண்டறியப்பட்டுள்ளது.
எலிகளில் (Mice) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போது, நீண்டகால மன அழுத்தத்தால் (Chronic Stress) பாதிக்கப்பட்ட மூளையில் நரம்புத் தொடர்புகள் இழக்கப்படுவதைத் தடுப்பதிலும், புதிய தொடர்புகளை உருவாக்குவதிலும் இந்தப் போதைப்பொருள் தாக்கம் செலுத்துவது அவதானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மூளையின் நரம்புத் தொடர்புகளை மறுசீரமைக்கும் செயல்முறையையும் (Neural Rewiring), மாயத்தோற்றம் தொடர்பான விளைவுகளையும் (Psychedelic Effects) தனித்தனியாகப் பிரிக்க முடியும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பு, மாயத்தோற்றத்தை ஏற்படுத்தாத வகையில் மூளையின் நரம்புத் தொடர்புகளை மறுசீரமைக்கக்கூடிய புதிய மருந்துகளை (Non-hallucinogenic Drugs) உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் மனச்சோர்வு (Depression), மனஅதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு (Post-Traumatic Stress Disorder – PTSD) உள்ளிட்ட மனநலப் பாதிப்புகளுக்குப் புதிய சிகிச்சை முறைகளை உருவாக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த ஆய்வு எலிகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளதால், மனிதர்களுக்கான சிகிச்சையில் (Human Treatments) இதன் தாக்கம் குறித்து உறுதிப்படுத்த மேலதிக ஆய்வுகள் அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.







